தனது சர்வதேச கடப்பாடுகளில் இலங்கை அரசாங்கம் தவறிவிட்டது: ஓக்லாந்து நிறுவன ஆய்வு அறிக்கை
இலங்கையின் நிலைமாறுகால நீதிக்கு மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் ஐ நா மனித உரிமைகள் சபை கலந்துரையாடலில் ஈடுபட்டுவரும் நிலையில் கலிபோர்னியாவின் ஓக்லாந்து நிறுவனம் இலங்கை தொடர்பில் இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள “மறுக்கப்பட்ட நீதி : இலங்கையில் மீள்குடியேற்றம், இராணுவநீக்கம் மற்றும் மீள்நல்லிணக்கம் ஆகியவற்றின் மெய்நிலை அறிதல்” என்ற ஆய்வு அறிக்கை நிலைமாறுகால நீதியை அடைவதற்கான தனது சர்வதேச கடப்பாடுகளில் இலங்கை அரசாங்கம் தவறி இருக்கின்றமை மற்றும் காணி விடுவிப்பு மீள் குடியேற்றம் ஆகியவற்றின் தாமதம் தொடர்பில் பல விடயங்களை வெளிக்கொணர்ந்துள்ளது.
” இலங்கை இராணுவம் பெருமளவு காணிகளை தொடர்ந்து ஆக்கிரமித்துவைத்துள்ளது, தரம் குறைந்த நிலங்களையே இராணுவம் விடுத்துள்ளது, தமது வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் பொதுமக்களின் திறனை பாதிக்கச்செய்தல், யுத்தத்தின்போது இடம்பெயர்ந்த மக்களுக்கான உட்கட்டுமான மற்றும் வீட்டு தேவை மிகப்பெருமளவில் இருக்கின்றமை மற்றும் மீள்குடியேற்றற்றத்துக்கான கால அட்டவணையை அடிக்கடி மாற்றுவது போன்றவை அரசாங்கத்தில் நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 2009 இல் யுத்தம் முடிவடைந்தபோதிலும் இராணுவத்துக்கான நிதி ஒதுக்கீடு இரட்டிப்படைந்துள்ளது. இது வடக்கு கிழக்கில் இராணுவத்தை வெளியேற்றும் அரசாங்கத்தின் நோக்கத்தில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது” என்று இந்த ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.