Skip to main content Skip to footer

இலங்கையில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை அச்சுறுத்தும் தீவிரமடையும் நில அபகரிப்பு

September 12, 2024
Arisikantha Purana Rajamara Vihara in Pulmoddai © The Oakland Institute

---FOR IMMEDIATE RELEASE---

உடனடியான வெளியீடு: September 12, 2023; 6:00 AM PDT

தொடர்பு: அனுராதா மிட்டால் [email protected], +1 510-469-5228

  • ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பில் ஆராய்ந்துவரும் இந்த வேளையில், கொடூரமான உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து 15 வருடங்கள் ஆகியுள்ள நிலையில், நாட்டின் கேந்திர முக்கியத்துவம்மிக்க திருகோணமலை மாவட்டத்தில் எவ்வாறு தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்பதை புதிய ஒரு ஆய்வு அறிக்கை விபரிக்கின்றது.

  • திருகோணமலையில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் கூடுதலாக வாழ்கின்ற 6 பிரதேச செயலாளர் பிரிவுகளில் தீவிரமாக இடம்பெற்றுவரும் நில அபகரிப்பு காரணமாக, மாவட்டத்தின் 27 சதவீதமாக தற்போது இருக்கும் சிங்கள மக்கள் மொத்த நிலப்பரப்பில் 36 சதவீதத்தை தம்வசம் வைத்துள்ளனர்.

  • வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை புவியியல் ரீதியாக இணைக்கும் திருகோணமலையின் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவு கடந்த 10 வருடங்களில் மிக மோசமான நில அபகரிப்பை சந்தித்துள்ளது. அபிவிருத்தி மற்றும் பேணுகை (conservation) ஆகிய திட்டங்களின் கீழும் பௌத்த விகாரைகளை விஸ்தரிப்பதற்குமாகவும் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவின் 50 சதவீதத்துக்கும் அதிகமான நிலம் அபகரிக்கப்பட்டுள்ளது. ஆகக்குறைந்தது 26 விகாரைகள் 3887 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கபப்ட்டுள்ளன.

  • பாரியளவில் வளம் நிறைந்த விவசாய மற்றும் கடற்கரை நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளதால் , தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் தமது வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர். தமது நிலங்களை மீள பெற்றுக்கொள்ளும் மக்களின் முயற்சிகள் இந்த பிரதேசத்தின் உச்ச இராணுவ பிரசன்னம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன.

ஓக்லாண்ட், கலிபோர்னியா- ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 57 ஆவது கூட்டத்தொடரில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பில் விவாதிக்கப்பட்டுவரும் இந்த வேளையில், " திருகோணமலை ஆக்கிரமிப்பின் கீழ் : இலங்கையின் தமிழர் தாயகத்தை இலக்குவைக்கும் நிலஅபகரிப்பு" என்ற ஓக்லாண்ட் நிலையத்தின் புதிய ஆய்வு அறிக்கையானது திருகோணமலையில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் நிலங்கள் மோசமாக அபகரிக்கப்பட்டுவருவது பற்றிய அதிர்ச்சியளிக்கும் தகவல்களை வெளியிட்டுள்ளது. சுதந்திரம் கிடைத்த நாள் முதல் அபிவிருத்தி என்ற போர்வையில் இலங்கையில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பகுதிகளில் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டு குடியேற்றங்கள் நிறுவப்பட்டுள்ள நிலையில், 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த நாள் முதல் இந்த குடியேற்றங்கள் அதிகரித்துள்ளமையையும், தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை வலுவற்றவர்களாக்கும்பொருட்டு தொடர்ச்சியான அரசாங்கங்கள் மற்றும் இராணுவம் ஆகியவை கையாண்டுவரும் பல்வேறு உத்திகளையும் இந்த புதிய அறிக்கை வெளிப்படுத்துகின்றது.

" யுத்தத்தின் பின்னர் கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்தும் இராணுவ ஆட்சியின் கீழ் இருக்கும் திருகோணமலை மாவட்டத்தில் சிங்கள மக்களின் ஆதிக்கம் விரிவடைந்துவருகின்றது " என்று ஓக்லாண்ட் நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் அனுராதா மிட்டால் தெரிவித்துள்ளார். " வடக்கு- கிழக்கு தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் ஒன்றிணைந்த தாயகம் என்ற கோட்பாட்டை இல்லாமல்செயும் அதேவேளை, அவர்கள் செறிந்துவாழும் பகுதிகளில் அவர்களின் சரித்திரம் மற்றும் கலாசாரம் ஆகியவற்றை அழிப்பதை இந்த நில அபகரிப்பு முன்னெடுப்புக்கள் இலக்குவைக்கின்றன" என்றும் மிட்டால் மேலும் தெரிவித்தார்.

இந்த நில அபகரிப்புக்கள் காரணமாக, திருகோணமலை மாவட்டத்தில் தற்போது 27 சத வீதமாக இருக்கும் சிங்கள மக்கள் அந்த மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பின் 36 சதவீதத்தை தம்வசம் வைத்துள்ளனர். 50 சதவீதத்துக்கும் அதிகமான நிலப்பரப்பு ( 41, 164 ஏக்கர்) அபகரிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 10 வருடங்களில் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவு மோசமான நில அபகரிப்பை சந்தித்துள்ளது. நீர்ப்பாசன திட்டங்கள், துறைமுக நவீனமயமாக்கல், வலு உற்பத்தி மற்றும் உல்லாசப்பயண மேம்படுத்தல் ஆகியவை உட்பட "அபிவிருத்தி" என்ற போர்வையின் ஒரு பகுதியாக தமிழ், மற்றும் சிங்கள மக்களின் நிலங்களை அபகரிக்கும் "சிங்களமயமாக்கல்" என்று அழைக்கப்படும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த நில அபகரிப்பு நடைபெற்றுவருகின்றது. தொல்லியல் திணைக்களம், வன இலாகா, மகாவலி அதிகாரசபை மற்றும் உல்லாச அபிவிருத்தி அதிகாரசபை ஆகியவை உட்பட பல்வேறு அரச நிறுவனங்கள் இந்த சிங்களமயமாக்கல் நடவடிக்கையில் சம்பந்தப்பட்டுள்ள.

தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் செறிந்துவாழும் பகுதிகளில் பௌத்த விகாரைகளை விஸ்தரிப்பதானது பௌத்தமயமாக்கலை மேற்கொள்வதற்கும் குடித்தொகை பரம்பலில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் தமிழ்மற்றும் முஸ்லிம் மக்களின் கலாசார சின்னங்களை அழிப்பதற்கும் ஏது செய்கின்றது.

2009 ஆம் ஆண்டில் இருந்து குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் 3887 ஏக்கர் நிலப்பரப்பில் 26 விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன. 2020 ஆம் ஆண்டு, அன்றைய அரசாங்கம், நிலங்களை ஆக்கிரமிக்கும் நோக்கத்துடன் இராணுவம் மற்றும் பௌத்த பிக்குகளை உள்ளடக்கிய 11 பேர் கொண்ட " கிழக்கு மாகாணத்தில் தொல்லியல் மரபுரிமை முகாமைத்துவத்துக்கான ஜனாதிபதி செயலணி குழு" ஒன்றை அமைத்திருந்தது.

மத ரீதியான நில அபகரிப்புகள் பற்றிய ஆவணப்படுத்தலின் பின்னர், 2023 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம், அமெரிக்காவின் சர்வதேச மத சுதந்திர ஆணைக்குழு ( United States Commission on International Religious Freedom ) மத சுதந்திர மீறல்களுக்காக இலங்கையை விசேட கண்காணிப்பில் சேர்க்குமாறு பரிந்துரை செய்திருந்தது. " பௌத்த விகாரைகளை மற்றும் மடாலயங்களை கட்டுவதற்கும் விஸ்தரிப்பதற்கும் பௌத்த பிக்குகள் அனுமதிக்கப்படும் அதேவேளை இந்த பகுதிகளில் தமிழ் மக்களின் புராதன இந்து ஆலயங்கள் அழிக்கப்படுவதுடன் அங்கு மக்கள் வழிபாடு செய்வதற்கும் தடை விதிக்கப்படுகின்றது" என்று மிட்டால் மேலும் கூறினார்.

ஓக்லாண்ட் நிலையத்தின் இந்த அறிக்கை மற்றும் அதன் முன்னைய அறிக்கைகளில் நன்கு ஆவணப்படுத்தப்பட்டபடி இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் மேலாக இனத்துவ ஆதிக்கத்தை ( ethnocratic dominance ) நிலைநாட்டுவதற்காக இலங்கை அரசு அதன் இராணுவ ஆக்கிரமிப்பை பயன்படுத்துகின்றது. இலங்கை இராணுவத்தின் 7 பிராந்திய தலைமையகங்களில் ஐந்தை வடக்கு மற்றும் கிழக்கில் வைத்திருப்பதன் மூலம், இந்த மாகாணங்கள் தொடர்ந்தும் உச்சளவில் இராணுவமயமாக்கப்பட்டு காணப்படுகின்றன. உச்சளவில் காணப்படும் இராணுவ பிரசன்னம் பௌத்த விகாரைகளை அமைப்பதற்கும் சிங்கள மக்களை குடியேற்றுவதற்கும் நிலங்களை அபகரிப்பதற்கும் உதவுகின்றது.

மிகப்பெரும் அளவில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் மக்களிடம் இருந்து நிலம் அபகரிக்கப்பட்டுள்ளமை ஆயிரக்கணக்கான மக்களை பாதித்துள்ளது. வளம்மிக்க விவசாய மற்றும் கடலோர நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளமை காரணமாக அவர்களின் பாரம்பரிய வாழ்வாதாரம் இல்லாமல் போயுள்ளது. தமது பகுதிகளுக்கு மீண்டும் திரும்பி அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத நிலையில், தமது நிலங்களை மீளப்பெற்றுக்கொள்வதற்கு முயற்சி செய்யும் மக்கள் பல்வேறு சட்ட தடங்கல்களையும் மற்றும் குடியேற்றப்பட்ட மக்களிடம் இருந்து அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்கின்றனர்.

" எமது எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. நாம் விவசாயம் செய்யவும் முடியாது மீன் பிடிக்கவும் முடியாது. இந்த நிலைமை தொடருமானால், எமது வழித்தோன்றல்கள் இந்த கிராமத்தில் தொடர்ந்து வசிக்கும் சாத்தியம் இருக்காது" என்று குச்சவெளியை சேர்ந்த ஒரு மீனவர் கூறினார். சிங்கள அரசாங்கத்தின் அடக்குமுறையின் மத்தியிலும், துணிச்சலுடன் நீதிக்காக குரல் எழுப்பும் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் வாக்குமூலங்களை " திருகோணமலை ஆக்கிரமிப்பின் கீழ் " என்ற இந்த அறிக்கை உள்ளடக்கியிருக்கின்றது.

" உள்நாட்டு யுத்ததின் போதும் இன்றுவரையிலும் இலங்கை அரசு மேற்கொண்டுள்ள குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் மற்றும் பரிகாரம் ஆகியவற்றுக்கான எந்தவொரு சாத்தியத்தையும் இந்த அறிக்கையில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள தீவிரம் அடைந்துள்ள இலங்கையின் இனரீதியான நடவடிக்கைகள் (ethnocratic practices ) இல்லாமல் செய்வதுடன் ஏற்கனவே இருக்கும் துன்பம், அநீதி, பகையுணர்வு ஆகியவற்றை மேலும் அதிகப்படுத்துகின்றன. தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் நிலம் மற்றும் வாழ்வு ஆகியவற்றுக்கான அடிப்படை உரிமைகளை அரசாங்கம் மதித்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இராணுவமயமற்றதாக ஆக்க ஆரம்பித்தால் அன்றி, சமாதானமும் நல்லிணக்கமும் சாத்தியம் ஆகாது " என்று மிட்டால் மேலும் குறிப்பிட்டார்.

###